பரிசுத்த வாரம் ஆரம்பிக்கப்படுகின்றது...

அருளுரைக் குறிப்பு : குருத்தோலை ஞாயிறு


மத்தேயு 21:1-11

திருச்சபை வரலாற்றில் குருத்தோலை ஞாயிறு முக்கியமானதாகும். அன்றிலிருந்து பரிசுத்த வாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறப்பாக, குருத்தோலை ஞாயிறன்று சிறார்களும், பெண்களும், ஏனையவர்களும் குருத்தோலைகளை கையில் பிடித்தவர்களாக “ஓசான்னா, ஓசான்னா” என்று ஆண்டவருக்கு மகிமையைப் பாடுவர். ‘ஓசான்னா’ என்பதற்கு ‘இன்றே எங்களை இரட்சித்தருளும்’ என பொருள்படும்.

ஆண்டவர் இயேசு எருசலேமுக்கு கழுதையின்மேல் ஏறி சமாதான வீரராக எருசலேமுக்குள் நுழையும் வேளையிலே சிறார்கள், “உன்னதத்தில் இருக்கும் இறைவனுக்கு  மாட்சிமை உண்டாவதாக. கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உன்னதத்தில் ஓசான்னா” என்று பெரும் குரல் எழுப்பினர். 

அத்தகைய வேளையிலே சமயத் தலைவர்கள் குரலெழுப்பியவர்களை அதட்டினார்கள். ஏனெனில், மெசியா வரும்போதே பாடுகின்ற பாடலை இவர்கள் இப்பொழுதே பாடுகின்றார்கள் என ஆத்திரமுற்ற சமயத்தலைவர்கள் அதனை நிறுத்துமாறு வேண்டுகின்றார்கள். அப்பொழுது இயேசு சமயத்தலைவர்களை நோக்கி, “நீங்கள் பாடாவிட்டால் இந்த கற்கள் பாடும்” எனக் கூறுகிறார்.

அதாவது, இறைவன் தனது திட்டத்தை நிறைவேற்ற கற்களைக்கூட பயன்படுத்த முடியும் என்ற செய்தியை வெளிப்படுத்துகின்றார். “இன்றே இரட்சித்தருளும்” என இயேசுவை பார்த்து அவர்கள் கேட்பதற்கான காரியம் இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் உலகை இரட்சிப்பதற்காக. மத்தேயு 1:21ல், அவர் குமாரனைப் பெறுவார். அவருக்கு இயேசு என்று பெயரிடுவார்கள். ஏனெனில், அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். பாவங்களிலிருந்து மனுக்குலத்தை இரட்சிப்பது மனுமகனுடைய பணியாகும். மேலும், 1 பேதுரு 2:9லே, அந்தகாரத்திலிருந்து

மக்களை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு கொண்டு வருவதும் இயேசுவின் பணியாகும். அத்துடன், நியாயப்பிரமாணத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களை நியாயப்பிரமாணத்திலிருந்து இரட்சிப்பதும் இயேசுவின் பணியாகும். வீரராக எருசலேம் ஆலயத்திற்குள் சென்ற இயேசு ஆலயத்தை தூய்மைப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். 

சமநோக்கு நற்செய்திகளில் இது இயேசுவின் பணியின் இறுதிக் காலத்தில் இடம்பெறுவதாக ஆசிரியர்கள் வர்ணித்தாலும் யோவான் நற்செய்தியில் 2:13-17 வரையுள்ள பகுதியில், பணியின் முற்பகுதியிலேயே ஆலயத்தைத் தூய்மைப்படுத்தல் இடம்பெறுவதாக யோவான் கூறுகின்றார். இங்கே ஆண்டவர் இயேசு புறா விற்பவர்களைப் பார்த்து, “இங்கிருந்து அவற்றை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்” என தாழ்மையோடு கூறுகின்றார். ஏனெனில், புறா ஏழைகளின் காணிக்கைப் பொருளாகும். எனவே,

ஏழைகளுக்கான இடத்தை தனது திருப்பணியில் மறுபடியும் இயேசு காண்பிக்கின்றார். ஆலயத்திற்குள் நாணய மாற்றுவீதம் காணப்பட்டிருந்தது. உரோமாபுரி நாணயங்களெல்லாம் கலிலேயா நாணயத்திற்கு மாற்றப்பட்டே காணிக்கைக் கொடுக்கப்படும். எனினும், நாணய மாற்றுவீதத்தில் காணப்படும் இலாப நோக்கத்தை இயேசு கண்டித்துணர்த்தும் வகையில் அங்கே நாணய மாற்றுவீதப் பலகையை தலைகீழாகப் புரட்டி சமத்துவம் என்னும் திருவிருந்துப் பலகையை ஏற்படுத்துவதாக யோவான் காண்பிக்கின்றார்.

மேலும், ஆடு மாடுகளை விரட்டியடுக்கும் காட்சி எங்கள் முன்பதாகத் தோன்றலாம்.

பொதுவாக எருசலேம் ஆலயத்தில் புற இன மக்கள் வழிபாடு செய்யும் இடத்திலே இவ் ஆடு மாடுகள் வைக்கப்பட்டிருந்ததால் ஆத்திரமுற்ற இயேசு அவைகளை துரத்தியடித்து புற இன மக்களை ஆலயத்திற்குள் வழிபட அழைக்கின்றார். எனவேதான், இது எல்லா மக்களுக்குமான செபவீடு. நீங்களோ இதைக் கள்வர் குகை ஆக்கினீர்கள் என கூறும் வார்த்தைகள் எங்களுக்கு ஞாபகம் வரலாம்.

மன்றாடல்

அன்பான இறைவா, நீர் அன்று இஸ்ராயேல் மக்களை ஆலயத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், அந்தகார இருளிலிருந்தும் நியாயப்பிரமாணத்தின் பிடியிலிருந்தும் மக்களுக்கு விடுதலையைக் கொடுத்து நீர் ஓசான்னா என்ற வாக்குறுதியைக் கேட்டு அவர்களுக்கு பதில் உரைத்ததைப்போல இன்றும் நாம் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு உட்பட்டிருக்கின்றோம். எங்களுக்கும் விடுதலையாளனே விடுதலை அளிப்பீராக. இறைமைந்தன் இயேசு வழி நின்று மன்றாடுகின்றோம். பிதாவே.

ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்

Comments